வங்கிப் பங்குகளில் அதிகரித்த வாங்குதலால் வங்கி நிஃப்டி தொடர்ந்து இரண்டாவது வாரமாக உயர்ந்துள்ளது. எனினும், ஏற்றம் மேலும் வலுப்பெற முக்கிய எதிர்ப்புநிலைகளைக் கடக்க வேண்டும் என்று சாய்ஸ் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸின் வாராந்திர அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் 55,350.15 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கிய வங்கி நிஃப்டி, லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கிலான விற்பனையால் 54,708.80 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் வாங்குதல் அதிகரித்ததால் மீண்டு, 56,065.50 புள்ளிகள் வரை உயர்ந்தது. வார இறுதியில் 587.35 புள்ளிகள், அதாவது 1.06 சதவீதம் உயர்ந்து 55,844 புள்ளிகளில் நிறைவடைந்தது.தனியார் வங்கிப் பங்குகள் இந்த முன்னேற்றத்துக்குத் துணை நின்றன. தனியார் வங்கிக் குறியீடு 1.76 சதவீதம் உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் தலா சுமார் 3 சதவீதம் முன்னேறின. அதேநேரத்தில், பொதுத்துறை வங்கிக் குறியீடு 0.39 சதவீதம் சரிந்தது. பேங்க் ஆஃப் பரோடா பங்கு 2.29 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
வரும் வாரத்தில் 54,850–55,200 புள்ளிகள் வங்கி நிஃப்டிக்கான முக்கிய ஆதரவுப் பகுதியாக இருக்கும். இந்தப் பகுதிக்கு மேல் நீடித்தால், தற்போதைய மீட்சி தொடர வாய்ப்புள்ளது.
மேல்நோக்கி 56,350–56,700 புள்ளிகள் முக்கிய தடையாக உள்ளன. இந்தப் பகுதியைக் கடந்து நிலைத்தால் ஏற்றம் மேலும் வலுப்பெறலாம். வாங்கும் வேகம் மேம்பட்டாலும், உறுதியான ஏற்றப்போக்கு இன்னும் உறுதியாகவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.